புதன், 10 ஜூன், 2009

இழப்பை விட வெறுப்பு கொடுமையானது

நண்பனே!
கோடிப் புண்ணியம் உனக்கு
தொலைந்து போன என்
புன்னகைகளை தேடித் தருவாயா?

கட்டெறும்பு போல்
சின்ன சின்னதாய் சேகரித்து வைத்த
என் கனவுப் பெட்டகம்
அவளின் ஒரு வார்த்தையால்
இலங்கை இராணுவத்தின்
பொஸ்பரசு குண்டில் அகப்பட்டது போல்
புஸ்வானமாகிப் போனதே..!

அரைத் தசாப்த காலத்தில்
நிறைத்து வைத்தது - அவள்
நினைவுகளை மட்டுமே
என் நெஞ்சில் - அவள்
வெறுத்தொதுக்கிய போது
அத்தனையும் அரை நொடியில்
அம்மியில் வைத்து அரைத்தது போலானதே!

கண்டவுடன் காதலை சொன்னவனை
பிடித்திருக்கிறது அவளுக்கு
காத்திருந்து, புரிந்து கொண்டு
காதல் கொண்டவனை
வெறுத்திருக்கிறது அவளுக்கு

அவள் உறவை பார்த்தாள்
நான் உணர்வை பார்த்தேன்
அவள் உருவத்தை பார்த்தாள்
நான் உள்ளத்தை பார்த்தேன்
கடைசியில் அவளுக்கு
பெயரும் புகழும் கூட
பிடிக்கும் என்று புரிந்து கொண்டேன்

தோல்விகளை மட்டுமே
தோழனாய் கொண்ட எனக்கு
இதுவொன்றும் புதிதல்ல

நீ அதிகமாய் நேசித்தவர்கள் உன்னை
அவமதித்தாலும்
மரியாதை செய்வதாய் நினைப்பாய்
புறந்தள்ளினாலும்
நெருக்கத்தின் நிலையாய் உணர்வாய்

நீ உண்மையை
உணர்ந்து கொள்ளும் ஒரு நாளில்
அந்த இழப்பை விட
அந்த வெறுப்பு
உயிருடன் உன்னை செந்தீயில் தள்ளும்

நண்பனே!
எனக்காக நீ வடிக்கும் கண்ணீர்
வெந்து போன இதயத்தை
விரைவாய் குணமாக்கும்

நீயாவது புரிந்து கொண்டாய்...
எனக்குள்ளும் சின்னதாய்
ஒரு இதயம் இருக்கிறதென்று....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக