அடியே வேசி..!
உன்னை நான் ஏசுகிறேன்
உன் எழிலைக் கண்டு கூசுகிறேன்
உன் மானம் காக்க பேசுகிறேன்
தூரத்து நிலவே..!
நீ தூவும் மலரொளி கண்டு
கவிஞனானவன் கனக்க பேர்
உன்னை புகழ்பவன் கவிஞன்
நான் உன் கலைஞன்
பெண்ணாக உன்னை
பார்க்காத கவிஞன்
யாரென்று சொல்?
உன் மலரம்பில் மயங்காத
மானிடன் நான் என்று சொல்
உன்னை காதலிக்காத
கற்பலிக்காத
கவிஞன் யாருண்டு..?
கவிஞர்களின் காதலியே..!
உன் காதோடு ஒன்று சொல்கிறேன்
கேள்..!
நீ தூரத்து நிலா
உன்னை தொட்டனுபவிக்க
முடியவில்லை
அதனால்தான் - இவர்கள்
கவிதையால்
ஏணி கட்டிக்கொண்டிருக்கிறார்கள்
ஆயுள் முழுதும்
அடைய முடியாமல்
நீ ..!
எட்டாக் கனி என்றோ
பூமிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்
நீ..!
சரியான ஏமாற்றுக்காரி
எத்தனை கவிஞனை
இத்தனை நிலைமைக்குத் தள்ளிவிட்டு
நீ மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
பகலிலே
கதிரவக் கணவனுக்கு
பயந்து ஒழிந்து கொள்கிறாய்
இரவிலே - உன் எழில் முகம் காட்டி
இதயத்தை ஈர்ந்து கொள்கிறாய்
என்னை தினமும் கொள்கிறாய்
கவிஞனின் பூலோக காதலி எல்லாம்
உன்னை பகல் கூட்டிலேயே
பூட்டி வைக்க
ஐ. நா. சபையிடம்
மனு கொடுக்கிறார்கள்
கவிஞனின் விலை மாதே
இங்கு கற்புடன் வாழும்
கன்னிகளின் வாழ்கையில்
அல்லவா நீ
விளையாடுகிறாய்
அடியே தூரத்து நிலவே..!
நான் மட்டும் உன்னை
நகைப்பதால் தானோ
என்னை கண்டால்
மேகச் சேலையால்
உன் தேகத்தை மூடிக் கொள்கிறாய்...
பின் குறிப்பு:
இலங்கை ரூபாவாகினியில் இடம் பெற்ற கவியரசு வைரமுத்துவின் பேட்டி ஒன்றில் அவர் எழுதிய பாடலான "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா? " என்ற பாடல் உருவான கற்பனையை கூறும் போது மூத்த கவிஞர்கள் தொடக்கம் அவர் வரை ஒவ்வொருவரும் நிலவை வர்ணித்த விதங்களை கூறிக்கொண்டே வந்து இறுதியாக அவர், நிலவை விளையாட அழைப்பது போல் வித்தியாசமான கற்பனையில் இப்பாடல் உருவானது என்றார்.
இதனால் இதனைவிட ஒரு வித்தியாசமான கற்பனை எனக்குள் உருவானதால் எழுதிய கவிதையே இது.
இக்கவிதையை எழுதிவிட்டு முடிக்க முடியாமல் வெளியில் எழுந்து சென்று வானத்தை பார்த்த போது அந்த பௌர்ணமி இரவில் அழகிய மேகம் அப்படியே அசைந்து வந்து நிலவை மூடி மறைத்தது. அதனால்தான் இக்கவிதையை அவ்வாறு முடித்தேன்.
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக